×

கண்காணிப்பு குறைபாடு

உத்தரபிரதேசத்தில் இருந்து பாரத் கவுரவ் ரயிலில் 63 பேர், தென்னிந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 17ம்தேதி அங்கிருந்து புறப்பட்டவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரைக்கு வந்தனர். நேற்று அதிகாலை, மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டி திடீரென தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்று 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் தலா ரூ10 லட்சம், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ3 லட்சம் என்று நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களின் அனுதாபமும், அரசுகள் வழங்கும் நிவாரணமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சற்று ஆறுதலை தரும். அதேநேரத்தில் அவர்களை விட்டு பிரிந்த அரிய உயிர்கள் மீண்டும் கிடைக்குமா என்றால் அது நிச்சயம் முடியாது.

இது ஒருபுறமிருக்க, சமீபகாலமாக நடக்கும் ரயில் சார்ந்த விபத்துகள், மக்கள் மத்தியில் பல்வேறு ேகள்விகளை எழுப்பி வருகிறது. கடந்த ஜூன் 3ம்தேதி, பெங்களூரு ஹவுரா, கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் ஒடிசாவில் ஒன்றுக்ெகான்று மோதிக்கொண்ட ஓரிரு மணித்துளிகளில், 288 உயிர்கள் பலியானது தேசத்தையே அதிரவைத்தது. அப்போது ரயில்களின் பாதுகாப்பு குறித்தும், எளிய பயணிகளுக்கான வசதிகள் குறித்தும், முறையான கண்காணிப்பு குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்தது. அதேபோன்றதொரு கேள்வி இப்போதும் எழுந்துள்ளது. தீப்பிடிக்கும் பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என்பது, ரயில்வே துறையின் உத்தரவு. இதன்படி சாதாரணமாக தீப்பெட்டி எடுத்துச் சென்றால் கூட, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ரயில்வே நிர்வாகத்திற்கு உள்ளது. ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், சமையல் செய்த போது சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கதவுகளை பூட்டி வைத்திருந்ததால், தீப்பிடித்தவுடன் பலரால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை.

இதுவே உயிர் பலிகளுக்கு முக்கிய காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக, ரயில்வே துறையின் கண்காணிப்பு குறைபாடும் தனியார் நிறுவனத்தின் அலட்சியமும் மிக முக்கிய காரணம் என்பதையும் ரயில்வே ஆர்வலர்கள் இங்கே கோடிட்டு காட்டியுள்ளனர். பாரத் கவுரவ் என்பது இந்திய ரயில்வேயிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் சிறப்பு சுற்றுலா தொகுப்பாக ரயிலை குத்தகை அடிப்படையில் எடுத்து இயக்கும் ஒரு திட்டமாகும். இந்த ரயில் பெட்டியும், அந்த வகையில்தான் இயக்கப்பட்டுள்ளது. தனியார் வசமிருந்த இந்த பெட்டியில், ரயில்வே அதிகாரிகளின் கண்காணிப்பு எதுவுமில்லை. அதேநேரத்தில் அபாயகரமான பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வை குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனமும் ஏற்படுத்தவில்லை.

இவை இரண்டில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால், நிச்சயம் இந்த உயிர்கள் பலியாகி இருக்காது. மொத்தத்தில் ரயில்வே துறையின் கண்காணிப்பு குறைபாடும், தனியார் நிறுவனத்தின் அலட்சியமுமே இந்த விபரீதத்திற்கு காரணம் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. பொதுமக்களின் பெரும் பயன்பாட்டு சாதனங்கள், தனியார்மயமாக்கப்படுவதால் நிகழும் அபத்தங்களுக்கு, இந்த துயர சம்பவம் ஒரு உதாரணம் என்பது இங்கே மிகையல்ல.

The post கண்காணிப்பு குறைபாடு appeared first on Dinakaran.

Tags : Bharat Gaurav ,Uttar Pradesh ,South india ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...